சித்தர்கள் சமபாவனை உடையவர்கள். விருப்பு – வெறுப்பு, இன்பம் – துன்பம், வேண்டுதல் – வேண்டாமை என்ற பேதமற்ற உயர்ந்த குணங்களை கொண்டவர்கள்.
மானிட உருவில் வந்தாலும், மனிதர்களுக்கு உண்டான உலகியல் சார்ந்த செயல்களை அவர்கள் செய்வது போல் தோன்றினாலும் சிந்தையை எப்பொழுதும் இறைவன் மீது வைத்திருப்பார்கள்.
அவர்கள் ஜாதி, மத, ஆண், பெண், ஏழை – பணக்காரன், சமூகத்தில் உயர் பதவி – கீழ்நிலை வேலை என்ற அளவுகோல் கொண்டு மக்களை எடை போடாதவர்கள். மக்களின் மனத் தூய்மையை மட்டுமே மனத்தில் கொண்டு அவரவர் தேவைக்கேற்ப அவர்கள் கேக்காமலேயே அருள்பவர்கள்.
உருவமாய் உடலோடு வாழ்ந்தபோதும், முக்தி அடைந்தபின் அருவமாய் வாழும்போதும் தங்களை நம்பி வந்தவர்களின் சுமையை தங்கள் சுமையாக ஏற்று, சீடர்களின் உலகியல வாழ்க்கையை செம்மையாக நடத்திச் செல்ல தோன்றாத் துணையாக இருந்து அரண் செய்பவர்கள்.