ஸ்ரீ மரணமில்லாத பெருவாழ்வு

சாகாக்கல்வி

தரும்

மரணமில்லாத பெருவாழ்வு

(சிறு தொகுப்பு)

எழுத தூண்டியவன்

இறைவன்

எழுதியவன்

மு.குகன், திருச்சி.

guhananda@gmail.com

மூலம்: ஞானசற்குரு சிவ செல்வராஜ்,

தங்கஜோதி ஞான சபை அறக்கட்டளை,

கன்னியாகுமரி.

அவர்கள் எழுதிய

சாகாக்கல்வி மற்றும்

கண்மணிமாலை.

இந்த தொகுப்பை

<thirurmoolar.page.tl> என்ற web site ல் இருந்து download செய்து கொள்ளலாம்.

—————————————————————-

மரணமில்லா பெருவாழ்வு தரும் சாகாக்கல்வி.

எல்லா ஜீவராசிகளைப் போலவே மனிதனும் பிறக்கிறான். வளர்கிறான். படிக்கிறான். பொருள் ஈட்டுகிறான். திருமணம் செய்து கொள்ளுகிறான். பிள்ளை பெறுகிறான். முடிவில் உடலை கீழே விட்டுவிட்டு செத்துப் போகிறான். சில அசாதாரண மான மனிதர்கள், சித்தர்கள் செத்துப் போகாமல் ஜீவனை தன்னுள் ஒடுக்கி சமாதியாகிவிடுகிறார்கள். இன்னும் சில அசாதாரணமான தவசீலர்கள் தங்கள் தவவலிமையால் பஞ்சபூதத்தால் ஆன உடலை பஞ்சபூதத்தில் ஆன ஏதாவதொன்றில் மாற்றிக் கொள்கிறார்கள். இவை எல்லாவற்றையும் தாண்டிய நிலையே உடலையே ஒளியாக்குவது. உடலை கீழே விடாமல் ஒளியாகிய பேரொளியில் கரைந்து போவது.

ஒளி உடம்படைந்த ஒருவரின் உடலில் மண் பூதமே இருக்காது. அந்த உடலில் நெருப்பால் எரிக்க ஏதும் இருக்காது. எனவே ஒளி உடம்படைந்த ஒருவரின் உடலை அழிப்பதென்பது இயலாத காரியம். அப்படி ஒளி உடம்பு எடுத்து இறைவனோடு ஐக்கியமானவர்கள் பலர். அவர்களில் நந்தனார், பத்திரகிரியார், கருவூரார், மணிவாசகர், ஆண்டாள், திருஞான சம்பந்தர் ஆகியோர் சிலர். மகாவதார பாபாஜி கங்கை கரையில் ஒளியாக காட்சி கொடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இயேசு பெருமான் கல்லறையில் இருந்து மூன்றாம் நாள் ஒளியாக உயிர்த்தெழுந்தார். 1874ல் வடலூர் மேட்டுக்குப்பத்தில் நமது திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் ஒளியாகி அருட்பெரும் ஜோதி ஆண்டவருடன் இரண்டறக் கலந்தார். உலகம் உய்ய, மனிதன் மரணமில்லா பெருவாழ்வு பெற வடலூர் வள்ளல் பெருமான் வழிகாட்டுகிறார்.

சாகாக்கல்வி.

சாகாக்கல்வி – சாகாத நிலை பெற்றவர்கள் உபதேசித்தது. மனிதன் சாகாமல் இருக்கமுடியுமா என்றால் முடியும் என்கிறார்கள் அவர்கள். எல்லா சராசரி மனிதர்களும் சாகாமல் இருக்க முடியும் என்கிறார்கள் சித்தர்கள். சாகாமல் இருப்பது எப்படி என்ற ரகசியம் காலங்காலமாக மறைத்து வைக்கப் பட்டு விட்டது. அந்த ஞானத்தை, ரகசியத்தை பல சித்தர்கள் மறை பொருளாக சொல்லி வைத்தார்களே தவிர சராசரி மனிதன் புரிந்து கொள்ளும்படி ஏனோ அவர்கள் வெளிப்படுத்தவில்லை. வள்ளலார் அவர்களே அந்த ரகசியத்தை எல்லா மனிதர்களும் எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் தந்து திருவருட்பாவில் வெளிப்படுத்தி அருளினார்கள். வழிகாட்டியதோடு மட்டுமல்லாமல், வாழ்ந்தும் காட்டி, ஒளியுடல் பெற்று இறையோடு கலந்து நமக்கு கண் முன்னே ஒரு உதாரண புருஷனாக ஒளியுடலோடு வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்.

இறைவன் திருவிளையாடல்.

மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கு ஏற்ப வாழ்வை ஆரம்பித்தும் முடித்தும் வைக்கிறான். எல்லாம் இறைவன் செயல். இறைவன் அணுவுக்கும் அணுவானவன்; எல்லாம் ஆனவன்; எங்கும் நீக்கமற நிறைந்தவன்; அண்ட பகிரண்டமெல்லாம் ஒளியாக ஒளிர்பவன். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. அணுவுக்கும் அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும், அருள்வதும் அவன் திருவிளையாடல்களே.

இறைவன் நம் உயிராக, பிராணனாக, ஜீவனாக நம் தலையின் உள் மத்தியில் பத்திரமாக இருக்கிறார். உடல் இறைவனை, நம் உயிரை தாங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் உடலை இயக்குவது உயிரே. இறைவன் எங்கோ எட்டாத உயரத்தில் இல்லை. தூரத்தில் இல்லை. அவன் கூப்பிடு தூரத்தில், கைக்கெட்டிய இடத்தில் தான் எட்டாக இரண்டாக மெய்ப்பொருளாக கண்களில் உள்ளார். கோயிலில் கற்பூர ஆராதனை முடிந்து தீபத்தை கண்ணில் ஒற்றிக்கொள்கிறோம் அல்லவா. அது கண்ணில் ஒளியைப் பெருக்க வேண்டும் என்பதற் காகவே. ஜீவாத்மாவாகிய பெண்களாகிய மனிதர்களுக்கு பரமாத்மாவாகிய ஆணாகிய பரம்பொருள் நம் கண்ணில் நாம் காணும் தெய்வமாக உள்ளது. உடலில் பரம்பொருள் நம் கண்ணில் மெய்ப்பொருளாக உள்ளது.

உயிர்.

உயிரானது உலக மக்கள் அனைவருக்கும் ஒரே அளவில், அதாவது ஊசிமுனை அளவான நெருப்பு – தீ – ஜோதியே. உயிரின் தன்மை உஷ்ணம் தான், சூடு தான், ஒளி தான். உயிர் இருந்தால் உடலில் சூடு இருக்கிறது. கண்மணியில் ஒளி இருக்கிறது. இதிலிருந்து கண்மணியில் தான் உயிர் துலங்குகிறது என்பது புரிகிறதல்லவா.

உயிர் நம் உடலில் எங்கு உள்ளது?

“எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்”. நம் உயிர் நம் தலையின் நடுவில் அதாவது , நம் தலை உச்சிக்கு கீழ் நம் உண்ணாவுக்கு மேல் நம் இரு கண்ணும் உள்ளே சேரும் இடத்தில் இருக்கிறது. அது துலங்குவது இரு கண்களில். நமது சிரசில் உச்சியில் இருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது. அது நமது கண் காது மூக்கு உள்ளே சேரும் மத்தியில், வாயில் உள் அண்ணாக்கின் சற்று மேல் வந்து நிலை கொண்டு , அங்கிருந்து இரு நாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது. இவ்விடத்தை லலாடஸ்தானம் , ஆன்ம ஸ்தானம், பத்தாம் வாசல், கடை கண் என்று சித்தர்கள் கூறுவர்.

பெருஞ்ஞோதி ஆண்டவனாகிய இறைவன், தானே சிறு ஜோதியாக தன்னை குறுக்கிக் கொண்டு ஜீவாத்மாவாக, உயிராக, பிராணனாக நம்முள் இருக்கிறார். “நான்” ஆகிய “ஆத்மா” சாவதில்லை. ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் கூறு. ஆத்மா கடவுளின் பேரொளியின் ஒரு துளி ஒளி. அவர் ஜோதி ஸ்வரூபம். நம் உள் மனம் கடந்த நிலையில் இருப்பதால் தான், உள்கடந்து இருப்பதால் தான் இறைவனை ஆன்றோர் கடவுள் என்கின்றனர். கடவுளை உடலினுள் தேடுபவன் காண்பான் கண்களினாலேயே. கடவுளை உடலினுள் தேடுவதே ஞானம். நம் உடலே இறைவன் வாழும் ஆலயம். ஜீவர்களே நடமாடும் சிவம். மனித உடலில் இருக்கும் உயிரை அறிய, உணர, உள்புகுந்து காண போக வேண்டிய வழியின் வாசல் நமது விழிகளே. இறைவன் இருக்கும் கோயிலின் வாசல் நமது கண்ணே. கண்ணே மெய்ப்பொருள் என்றும் சொல்லப்படுகிறது

உயிரே கடவுள். உண்மை இதுவே. ஞானம் இதுவே. இதை அறிவதே குரு உபதேசம். இதை உணர்வதே தீட்சை. இதை அறிந்து உணர்ந்து தவம் செய்பவனே இறைவனை அடைவான். தன்னை உணர்ந்து, தனக்குள் அந்த பரமாத்மாவே தன் உயிராக இருப்பதை அறிந்து, உணர்ந்து தவம் செய்பவனே ஞானம் பெறுவான். ஞான தீட்சை மூலம் கண்மணியில் உணர்வு பெற்று உயிரை நோக்கி தவம் செய்பவன் ஞானி. அப்படிப்பட்டவனே “துவிஜன்” ஆகிறான். மறுபிறப்பாளன் ஆகிறான். ஒரு தாயின் மடியில் பிறந்த மனிதன் குருவின் கருணையால் சூட்சும சரீர பிறப்பு எடுத்து மீண்டும் பிறக்கிறான். காரணமாயிருக்கும் கடவுளை அறிந்து உணர்ந்து மரணமில்லா பெருவாழ்வு பெற்றவனாகிறான். அப்படி உணர்ந்தவன், கடவுளைப் போல எல்லோரிடமும் எல்லா உயிர்களிடமும் அன்பு பாராட்டுவான்.

நம் உடலிலே உள்ள உண்மைப்பொருள், சத்தியப் பொருள், அழியாத பொருள் நம் உயிர். அது எல்லாம் வல்ல பேரொளியான பரமாத்மாவின் ஒரு சிறு துளி ஒளி. அதை ஜீவாத்மா என்பர். அது துலங்கும் இடம் நம் உடலின் கண். மெய் துலங்கும் பொருளாக விளங்குவது கண்.

நம் கண் ஒளியாக, பார்வையின் ஆற்றலாக விளங்குவது நம் உயிர் சக்தியே. இறைவன் நம்முள் மறைந்திருக்கிறான். சூட்சுமமாக உள்ளே துலங்குகிறான். ஊனக்கண்ணால் உலகைக் காணமுடியும். ஆனால் உள்ளே இருக்கும் பெரும்ஜோதியைக் காணமுடியாது. ஊனக்கண் தவம் செய்து ஞானக்கண்ணாக மாறும்போது உள் விளங்கும் பெரும்ஜோதி ஆண்டவரை நாம் காணமுடியும்.

“எல்லாம் வல்ல இறைவன் பெரும்ஜோதிமயமானவன்.” “அவனே சிறுஜோதியாக நம் உடலில் உயிராக இருக்கின்றான்.” “இறைவன் மனித தேகத்தில் கண்ணில் ஜோதியாக துலங்குகிறான். “ இவையனைத்தும் மனிதனாக பிறந்த நாம் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய மாபெரும் ரகசியங்கள். மனித தேகத்தில் தலையினுள்ளே, மத்தியில் நம் உயிர் இருக்கின்றது. அது துலங்குவது இரு கண்களில்.

இதை உறுதிபடுத்தும் சிலவற்றைக் காண்போம்.

1. கடோபநிஷத்தில் எமதர்மனிடம் நசிகேதன் உயிர் பற்றி, கடவுள் பற்றி கேட்க அவர் கூறுகிறார் “ இறைவன் மனித தேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக விளங்குகிறான்.

2. கீதையில் கிருஷ்ண பகவான் “மந்திரங்களில் நான் காயத்ரி” என்கிறார். காயத்ரி மந்திரத்தின் சாராம்சம் “ஒளி கடவுளை தியானிப்போமாக என்பதே.”

3. திருமூலநாயனார் திருமந்திரத்தில் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார். தண்ணீர் ஊற்றும் பாத்திரத்தில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று சொல்வோம். நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு . அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும். அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது! இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும் என ஞான ரகசியத்தை வெளிப்படுத்து கிறார் திருமூலர்.

4. “நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத் தோட்டத்து மாம்பழந்தூங்கலுமாமே” என்கிறார் திருமூலர். நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.

5. பிராண நீரானதில் உருண்டு திரண்டதை கண்டு அறிந்திடு நீ.”” என்கிறார்கள் சித்தர்கள். கருவிழிக்குள் பிராணநீர் உள்ளது. அதில் தான் கண்மணி மிதந்து கொண்டிருக்கிறது.

6. “ஊசிமுனை காட்டுக்குள் உலாவியே இருக்கலாம் வாரீர்” என்கிறார் ஒரு சித்தர்.

7. “கண்மணி ஊசிமுனை வாசலுக்குள் பிரவேசித்தால் அது பெருங்காடாமே” என்கிறார் ஒரு சித்தர்.

8. “அண்டம் போல் அழகியதாம் கண் மூன்றுடையதாம் ஒற்றி கடலருகே நிற்கும் கரும்பு” என்கிறார் பட்டினத்தார். கரும்பு என்பது கரும் – பு , கருப்பு பூ. அது கண்மலரையே குறிக்கும்.

9. கண்ணில் ஒளியை உணர்ந்து கண்ணை விழித்து பேசாது சும்மா இரு என்பதுவே ஆதிகுரு தட்சிணாமூர்த்தி சொல்லாமல் உணர்த்திய

ஞான இரகசியம்.

10. சின்முத்திரை என்பது கண்ணையே குறிக்கும்.

11. ஒன்றான கடவுளோடு நான் ஒன்ற நம் கண் ஒளியில் சும்மா இருந்து விழித்திருந்து தவம் செய்வது ஒன்றே வழி.

12. விழி தான் ஞானம் பெற ஒரே வழி. விழித்திருந்து தவம் செய்வது ஒன்றே நம் கடமை.

13. பரப்பிரம்மமான, அண்டம் போல் அழகான கண்மணியின் உச்சியான புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி” என்கிறார் சித்தர் காகபுசந்தர்.

14. “கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு.” என்று புருவம் கண் என்று வெட்ட வெளிச்சமாக்கி விட்டார் வள்ளல் பெருமான். வள்ளலார் தான் இரு கண்களாலும் செய்த பெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்.

15. அங்கமதில் முதன்முதலாய் தோன்றிய தலம் எது? சொல்ல வல்லார் உண்டானால் குரு என பணியலாமே என்கிறார் ஒரு சித்தர். (அங்கமதில் முதன்முதலாய் தோன்றிய தலம் கண்)

16. புருவமத்தி, நடுமூக்கு என பரிபாசையாக சொல்லப்படுவது கண்ணே.

17. பல ஞானிகள் புருவமத்தியான கண்ணை இருதயம் என்பர். இருதயம் என்பதை பிரித்து பாருங்கள். இரு + உதயம் . நம் உடலில் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், ஆக இதைத் தான் இந்த சூரிய , சந்திர உதயத்தை தான் இரு உதயமாக (இருதயமாக) கூறி உள்ளனர் ஞானிகள். இதை சிவவாக்கியர் எந்த ஒளிவு மறைவு மில்லாமல் கூறி உள்ளார்.

18. கண்ணன் என்ற தமிழ் வார்த்தை நம் உடலில் இறைவன் துலங்குவதை குறிக்கும். கண் + அவன் = கண்ணன். இந்த கண்ணனை – கண் ஒளியைத் தான் நாம் தியானிக்க வேண்டும். 19. வள்ளலார் திருவருட்பாவில் கண்ணே இறைவனை அடையும் வழி என பல்வேறு பாடல்களில் தெரிவிக்கிறார்.

உதாரணத்திற்கு சில திருவருட்பா வரிகள்…

கண்ணின் உண்மணியாயநின்தனைக் கருதிடாதுழல் கபடநேற்கருள்

மணியே அடியேன் கண்மணியே மருந்தே

என்றன் கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிரக் காணேனோ

காவி மலைக்கண் வதியேனோ கண்ணுள் மணியைத் துதியேனோ

கண்மணியில் நினைவை செலுத்த செலுத்த கண்களில் ரத்த ஓட்டம் மிகுந்து காவி கண்ணாகும். சந்நியாசியானவன் காவி கட்ட வேண்டும் என சொல்வது இதைத் தான். இப்படிப்பட்ட காவி ஏறிய கண்ணிலேயே வசிக்க வேண்டும். மனம் தங்க வேண்டும் கண்மணியின் ஒளியை, இறைவனை துதிக்க வேண்டும். காவி உடைகள் தரித்தவனெல்லாம் சந்நியாசி அல்ல என வள்ளலார் கூறுகிறார்.

பரமன் ஈன்ற கண்ணேநின் தணிகைதனைக் கண்டு போற்றேன் என்கிறார் வள்ளலார்.

என்னிரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி

கண்ணினால் உனது கழற்பதம் காணும் கருத்தினை மறந்து

சொல் ஆர்ந்த விண்மணியை என்உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில் என் கண்மணியை நெஞ்சே கருது.

20. இயேசு கிறிஸ்து : “தேவன் ஒளியாக உள்ளான், நீ ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம்”.

நம் மெய் எனப்படும் உடம்பில் விளக்கு கண் எனப்படும். “கண்ணே சரிரத்தின் விளக்கு. இதெல்லாமல் வேறு விளக்கு இல்லை. உன் கண்கள் ஒளி மிகுந்ததாக இருந்தால் உன் உடல் ஒளி மிக்கதாக இருக்கும்” நம் கண் ஒளியை பெருக்கி அந்த ஒளியில் உள் நடந்து

தேவனை தரிசிக்க வேண்டும் .

21. திருநாவுக்கரசர் : “காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான் காண்”

சமாதி நிலையும் சகஜ நிலையும்.

விழித்திரு. உயிர் அறியாது ஒடுங்குவது தூக்கம். தூங்கும்போது நம் உயிர் ஒடுங்கி விடுகிறது. உயிர் ஒடுங்கி விட்டால் நாம் செயல் இழந்து போய் விடுகிறோம். உயிரை அறிந்து ஆதாரத்தில் ஒடுக்குவது சமாதி. மகான்கள் தங்கள் உயிரை ஆதாரத்தில் ஒடுங்கச் செய்து, புறச்செயல் அற்று சமாதி கூடி அறிதுயில் கொள்கிறார்கள். இத்தகைய சமாதி ஒன்றும் மேலானதல்ல என்கிறார் வள்ளலார். சமாதியில் மூழ்குவது பெரிதல்ல. உயிர் அனுபவம் உணர்ந்து, பெற்ற பேரின்ப நிலையிலேயே சகஜமாக எப்போதும் இருப்பதுவே சிறப்பு என்கிறார் வள்ளலார். சகஜ நிலையிலேயே எப்போதும் இருப்பதுவே மரணமில்லா பெருவாழ்வுக்கு வழியாகும்.

பிறப்பும் இறப்பும்.

மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம். இல்லையேல் நாம் சவம். உடலோடு உயிர் இருந்தால் தான் இயக்கம். உடல் முக்கியமா இல்லை உயிர் முக்கியமா என கேட்டால் அழியக்கூடிய உடலைவிட அழிவற்ற உயிரே முக்கியமானது. உயிர் இன்றி உடல் இருந்தால் மண்தான். உயிர் தான் பிரதானம். உயிர் தான் உடல் கொண்டு பிறக்கிறது. உடலை விட்டு உயிர் பிரிவதே மரணம். உயிர் தங்கிய உடல் தான் அழிகிறது. உயிர் அழிவதில்லை. உடலில் உள்ள உயிர் ஒரேயடியாக தூங்கிவிடுவது தான் மரணம். பிறப்பும் இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான். இறந்தால் நரகமோ! சொர்க்கமோ! மீண்டும் பிறந்து தான் ஆக வேண்டும். இது சத்தியம். மரணமிலா பெருவாழ்வு பெற்றவர்க்கே மறுபிறப்பில்லை.

தன் உயிரை அறிவதே, உணர்வதே இறைவனை அறிவதும் உணர்வதுமாகும். தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும். மனிதனாக பிறந்தது தன் உயிரை, தன்னைஉணரவே. ஒளி ஆகவே.

இந்த உலகமே மனித குலத்துக்கு சொந்தம். நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே. நாம் அனைவரும் ஜீவாத்மாக்களே. எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் அம்மையப்பனாகிய இறைவனே. ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய நல்லதுக்கும் கெட்டதுக்கும் அவரவரே தான் பொறுப்பு. வேறு யாரும் கிடையாது. தீதும் நன்றும் பிறர்தர வாரா. அவரவர் செய்த செயல் களே புண்ணியம் என்றும் பாவம் என்றும் இருவினைகளாகி அதற்குரிய பலன்களை அவரவரே அனுபவிக்க செய்கிறது. இதுவே இறைநியதி. நாம் பிறர்க்கு செய்யும் நல்லதோ கெட்டதோ இனி ஒருநாள் நமக்கு வந்தே தீரும். வினை விதைத்தவன் வினை அறுப்பான். எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த நல்வினை தீவினைகள் இப்படி மூட்டை மூட்டையாக இருக்கின்றது. இறைவன் நம்மீது கருணை கொண்டு அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல், நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக எடுத்து நம் உயிரோடு இணைத்து விதிக்கப்பட்ட பிராரத்துவ கர்மத்துடன் நம்மை மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்கச் செய்துள்ளார். பிராரத்துவ வினைகளோடு பிறந்த நாம், நம் வாழ்நாளில் புரியும் கர்மங்கள் ஆகாமியம் எனப்படும். பிராரத்துவ வினைகளோடு ஆகாமியமும் சேர்ந்து நல்வினை, தீவினையாகிய வினைகள் கூடவோ குறையவோ செய்யலாம். இப்படி எதையாவது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மனிதன் செத்துப் போகிறான். ஒவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினை பயன்கள் மட்டுமே. “பற்றித் தொடரும் இரு வினையன்றி வேறொன்றில்லை பராபரமே” என்கிறார் சித்தர் பெருமகனார். பிறப்பிறப்பின் இரகசியம் இது. நாம் பிறந்தது பூர்வ ஜன்ம கர்மவினைப்படி விதிப்படியே என்றாலும் கண்மணியில் புள்ளியில் விளங்கும் ஜோதியைப் பற்றி அறிந்து உணர்ந்து தவத்தால் சாதனை புரிந்து இந்த விதியை மதியால் வெல்லலாம் என்பது உண்மை.

மரணம் இல்லாத பெருவாழ்வு.

மனிதா தூங்காதே. விழி, உழை, ஓயாது உழை சாகாமல் இருக்கும் நமது லட்சியம் நிறைவேறும்வரை. மரணம் ஏற்படாமல் அதாவது உடலை விட்டு உயிர் பிரியாமல் எப்போதும் இந்த உடலிலேயே இந்த உயிரை நிரந்தரமாக தங்க வைப்பதே மரணம் இல்லாத பெருவாழ்வு. சாவாநிலை. செத்தால் தானே உயிர் மீன்டும் பிறக்கும்! சாவைத் தவிர்த்தால் இனி பிறப்பையும் தவிர்க்கலாமே. விதியோடு இறையருளால் பிறந்த மனிதன், எதைஎதையோ செய்து எஞ்சிய வினையோடு சாகாமல், எதைஎதையோ செய்யாமல் விதியிலிருந்து வினையில் இருந்து தப்பித்த ஞானிகள் உபதேசப்படி வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டால், வினைகளை அழித்துவிட்டால், சாகாமல் இருக்கலாமல்லவா! வினையிருந்தால் தானே சாவு. வினை இருந்தால் தானே மீண்டும் பிறப்பு ஏற்படும். வினைகளை இல்லாமல் செய்து விட்டால் – பிறந்துவிட்ட நமக்கு இறப்பு கிடையாது. இறப்பு இல்லையெனில் ஏது இனி பிறப்பு? மரணமில்லா பெருவாழ்வே மறுபிறவி இல்லா நிலையைத் தரும்.

புருவ மத்தி என்பது எது?

புருவமத்தி என்பது நெற்றியில் பொட்டு வைக்கும் இடம் அல்ல. நாம் பொட்டு வைக்கும் இடம் இரு புருவங்களிடையே உள்ளது. ஞானிகள் புருவ மத்தி என்று சொன்னது புருவத்தின் கீழ் உள்ள கண்ணின் மத்தியே. எல்லா சித்தர்களும் , ஞானிகளும் நாம் தியானம் செய்ய வேண்டிய இடம் என்று கூறுவது புருவ மத்தியான கண்ணே.

கண்.

தாயின் வயிற்றில் கரு உருவாகும்போது முதலில் உருவாவது ஒரு கண். அது இரண்டாக பிரிந்து அங்குள்ள உஷ்ணத்தால் வெதுப்பி வெதுப்பி பிண்டம் உற்பத்தியாகிறது. தாயின் கருவில் முதன்முதலில் உருவாகும் உறுப்பு கண்ணே. உயிர் துலங்கும் கண் உலக மக்கள் அனைவருக்கும் ஒரே அளவில் தான் உள்ளது. பிறந்ததிலிருந்து 100 வயதானாலும் வளர்ச்சியோ, முதிர்ச்சியோ அடையாத ஒரே உறுப்பு கண். நம் உடலில் இருந்தாலும் எந்த பிடிப்பும் இன்றி, உடலோடு ஒட்டாமல் அந்தரத்தில் இருப்பது கண்மணி. “அந்தரத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே” என வள்ளலார் பாடியது இதையே.

நமது கண் எப்படி இருக்கிறது தெரியுமா? வெள்ளை விழி, அடுத்து கருவிழி, அதற்கு மத்தியில் கண்மணி. கண்மணி அந்தரத்தில் எதையும் தொடாமல் தனித்து தான் இருக்கும். சுழன்று கொண்டே இருக்கும்.

கண்மணியின் மத்தியில் ஊசிமுனையளவு துவாரம் இருக்கின்றது. அந்த ஊசிமுனை வாசலினுள் ஊசிமுனையளவு ஜோதியாக ஆடிக்கொண்டிருக்கிறான் பரமாத்மா. அங்கே துலங்குகிறது சிற்ஜோதி. ஜோதியின் அசைவே நடனம். கண்மணியின் ஊசிமுனையளவு இடமே சிற்சபை. திருவாகிய இறைவன் ஆடுகின்ற திருச்சிற்றம்பலம். சிற்சபை வழியே சென்றால் பொற்சபை. இருகண்ணும் உள்ளே சேருமிடம். முக்கோண வடிவில் இரு கண்களும் கூடும் மூன்றாவது இடம். சூரிய சந்திர கலைகளாகிய வலது இடது கண்கள் உள்ளே ஒன்று சேருமிடம் மூன்றாவது கண்ணாகிய, அக்னிகலையாகிய ஆத்மஸ்தானம். “நம் உடலில் தலையில் உச்சிக்கு நேர் கீழே நம் வாய் உட்புறத்தில் அண்ணாக்கின் மேலே மொத்தத்தில் நம் தலையின் உள் நடுவிலே இருக்குமிடமே நம் இரு கண்களும் உள் சென்று சேருமிடம்” என்கிறார் திருமூலச் சித்தர்..

கண்மணியின் மத்தியில் ஊசிமுனையளவு துவாரம் இருக்கின்றது. ஊசிமுனையளவு நெருப்பு உள்ளது. ஊசிமுனை துவாரம் மெல்லிய ஜவ்வால் அடைபட்டிருக்கும். கண்மணியின் ஊசிமுனை துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு ஒளி நம் ஆத்மஜோதி துலங்குகிறது. அந்த ஜோதியை நாம் காண வேண்டும். அதற்குத் தடையாக இருப்பது கண்மணியின் ஊசிமுனை துவாரத்தை அடைத்துக் கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே, நமது மும்மலங்களே. இந்த துவாரத்தில் துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சூட்சுமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது என்கிறார் வள்ளலார். வள்ளலார் கண்ணாடி கூண்டின் உள் விளக்கினை ஏற்றி வைத்ததன் பொருள் இதுவே. இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான். இவ்வினைகள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது. இதையெல்லாம் சூட்சுமமாக சிருஷ்டித்தவன் எல்லாம் வல்ல இறைவன். திரைகளாகிய ஜவ்வே, நம் வினைகளே நாம் நீக்க வேண்டிய பொருள். திரை நீங்கினாலேயே நாம் நம் ஆத்மஜோதி யைக் காணமுடியும். இதுவே நாம் அடைய வேண்டிய மாபெரும் பேரின்ப நிலையாகும். மனிதனாக பிறந்த நாம் பெற வேண்டிய அதி உன்னத நிலையாகும்.

“பூட்டைத் திறப்பது கையாலே மனப்பூட்டைத் திறப்பது மெய்யாலே” என்கிறார் ஒரு சித்தர். இங்கே கை எனப்படுவது நமது கண்களே. நமது கண்கள் தான் இறைவனின் திருவடிகள். கண்மணி ஒளியே மெய்ப்பொருள் என்றும் சொல்லப்படுகிறது. மனம் இருப்பது கண்ணில் தான். அதை ஒளியாகிய மெய் கொண்டு திற என்கிறார். கண்மணியில் உள்ள மனதை அகற்ற கண்மணியின் உள் உள்ள ஒளியை பிடி. ஒளியை வைத்து மனதைத் திற. கண்மணி வாசலை திறந்துவிடலாம் என்பதே இங்கு சொல்லப்படும் ஞான இரகசியம்.

வெட்டாத சக்கரம், பேசாத மந்திரம், வேறொருவர்க்கு எட்டாத புஷ்பம், இறையாத தீர்த்தம், இனி முடிந்து கட்டாத லிங்கம் கருத்தினுள்ளே முட்டாத பூசையன்றோ என் குருநாதன் மொழிந்ததுவே என்கிறார் சித்தர் பெருமகனார். அனைத்துமே ஒரே பொருள் தான்; மெய்ப்பொருள் தான்; கண் தான். கண்ணே வெட்டாத சக்கரம்; கண்மணியே பேசாத மந்திரம்; கண்மணியே வேறொருவர்க்கு எட்டாத புஷ்பம்; கண்ணில் உள்ள நீரே இறையாத தீர்த்தம்; வெள்ளை விழி, கருவிழி, கண்மணி என மூன்று வட்டமாக உள்ளதும், சிவமாகிய ஒளி, நம் ஜீவ ஒளி உள்ளதுமான கண்ணே சிற்பிகளால் உருவாக்கப்படாத முடிந்து கட்டாத லிங்கம். திருவடி தீட்சை பெற்று கண்ணில் செய்யும் தவமே கருத்தினுள்ளே முட்டாத பூசையாகும்.

கண்மணியில் இறைவன்.

மெய்ப்பொருளான கண்மணியினுள் ஊசிமுனையளவு ஒளியாக இறைவன் இருப்பதை குருமூலம் அறிந்து உணர்ந்து, அந்த இறைவனை, நம் உயிரை அடைய தவம் செய்ய வேண்டும். நம் உயிரான கடவுளை அடைய நாம் செய்த வினைகளே விதியாகி உயிர் ஒளியை மறைத்துக் கொண்டிருக்கிறது. ஞான சற்குருவால் உபதேசம், தீட்சை பெற்று தவம் தொடர்ந்து செய்து வந்தால், நம் உயிர் ஒளியை மறைத்துக் கொண்டிருக்கும் வினைகளை, ஜவ்வை, திரைகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடலாம். சதாகாலமும் தவம் மேற் கொண்டோமானால், நமது வினைகள் எல்லாம் இல்லாமல் ஆவதுடன் நம்மை “திரு”வாகிய இறைவனாகவே ஆக்கிவிடும். வினை இருந்தால் தான் “நான்”. வினையற்றால் அவன் தானே. இறைவன் தானே. நான் தான் அது; அதுதான் நான்; “தத்துவமஸி” நிலை வந்து விடும். நான் அதுவானால் மரணம் ஏது? மரணம் இல்லாத போது மறுபிறப்பு ஏது? துன்பம் ஏது? எப்போதும் பேரின்பமே. ஒளியை மறைத்த வினையகன்றால் ஒளி பிரகாசிக்கு மல்லவா? ஒளி மேலும் மேலும் பெருக இந்த தூல உடல் ஒளியுடலாக மாறும். இது எல்லோராலும் முடியும். இப்பிறவியிலேயே முடியும். இதற்காக தனியாக பிறவி ஒன்றும் எடுக்க வேண்டியதில்லை. “வம்மின் உலகியலீர் மரணமிலா பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்” என்கிறார் வள்ளலார். “மனந்தளராமல் இடைவிடாது முயற்சி செய்கிறவர்கள் ஊழ்வினை களையும் வென்றுவிட முடியும்” என்கிறார் திருவள்ளுவர். “தவம் செய்பவருக்கு அவமாகிய வினைத்துன்பம் ஒருநாளும் வராது” என்கிறார் ஒளவையார்.

ஜீவ பிரம்ம ஐக்கியம்.

மனிதன் தான் பிறந்தது நம்மை பிறப்பிக்கச் செய்த இறைவனோடு ஒன்றிவிடத்தான். எட்டும் இரண்டு மாகிய கண்களின் ஊசிமுனை வாசல்வழி கண்டு போனால் உய்யலாம்; வாழலாம்; பேரின்பம் பெறலாம். ஒன்றான இறைவனை இரண்டாக உள்ள கண்களிலே, மெய்ப்பொருளிலே நினைந்து உணர்ந்து நெகிழ்ந்தால் ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டற்று ஒன்றாகலாம். ஜீவன் முக்தராகலாம்.

மனிதர்கள் நாம் பெண்ணான ஆத்மாக்கள். பரமாத்மாவே ஆணான புருஷோத்தமன். இருவரும் இணைவதே ஜீவ பிரம்ம ஐக்கியம். அதுவே பேரின்பம். ஆத்மாவால் பரத்தில் பெறும் இன்பமே பேரின்பம். ஜீவ பிரம்ம ஐக்கியமே நாம் அறிந்து உணர்ந்து அடையவும் வேண்டியது ஆகும். மெய்ப்பொருள் அறிந்து விழித்திருந்து மெய்யிலே ஒளியைப் பெருக்கி மெய்யாகிவிடலாம் நாமுமே.

மூன்றாவது கண்.

வலது கண் சூரியனாகவும் இடது கண் சந்திரனாகவும் தோன்றி ஒளி உண்டாகும். நம் இரு கண்களையும் சூடு கொள்ள, உணர்வால் சூடு பெருக்கிட செய்து பார்க்கையில் சூரிய சந்திரனாகிய இரு கண் ஒளி ஒன்று சேர்ந்துவிடும். அங்கே மூன்றாவது கண்ணாகிய அக்னிகலை; அகக்கண்; ஞானக்கண்; நெற்றிக்கண் தோன்றும் அக அனுபவம் கிட்டும். மெய் அனுபவம் பெற வேண்டுமாயின் மெய்யிலே விளங்கும் மெய்ப்பொருளைப் பற்ற வேண்டும். மெய்யை மெய்யாக்கி விட வேண்டும். கண் இரண்டையும் ஒன்றாக்கினால் உள்ளே ஒளிரும் மூன்றாவது கண். ஓங்காரமான “அ, உ “ சேர்ந்ததே “ம்” மூன்றாவது கண்ணாகிய அக்னிகலை; அகக்கண்; ஞானக்கண்; நெற்றிக்கண்.

மெய்யை மெய்யாக்கு.

நமது உடல் எனும் மெய் இறைவனை அறியாதவனுக்கு பொய்; அந்த பொய் உடல் மரணத்தில் அது அழிந்து போகும். உண்மையில் நமது மெய் பொய்யல்ல. நித்ய ஜீவனைத் தாங்கியிருக்கும் அது அழியாதது. மெய் பொய்க்காமல், அழியாமல் வைக்கும் உபாயம் அறிந்து காத்தால் மெய்தங்கிய உடலும் உண்மையில் மெய்யாகி விடும். உடலிலே இருக்கும் மெய் துணைகொண்டு காயத்துள் நின்ற கடவுளை கண்டால் மெய் மெய்யாகிவிடும். பொன்னார் மேனியனை நம் மெய்யில் கண்டால் நம் உடலும் பொன் உடலாகும். இது உண்மை. மெய் தந்தவனை, மெய்யினுள் மெய்ப்பொருள் தந்தவனை கண்களில் காணுங்கள்; உணருங்கள். நன்றி சொல்லுங்கள். இறைவன் நம் மெய்யிலே உள்ளார். இறைவனை நம் மெய்யிலே உணர்ந்தால் தான் பார்க்குமிடமெங்கும் நீக்கமற அந்த பரஞ்சோதியே நிறைந்திருக்கிறான் என்பதை தவத்தால் நம்மால் உணர முடியும். நம் உடல் என்னும் கூட்டை நம்முள் உயிராக இருக்கின்ற இறைவனே சதாகாலமும் தூக்கித் திரிகிறான் என்ற உண்மையையும் உணரமுடியும்.

ஒளியுடல் பெறலாம்.

ஞானம் என்பது தன்னை உணர்தலே. மனிதனாக பிறந்த நாம் இறைவன் நம் மெய்யில் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்று உணர்வதே ஞானம். இந்த ஞானம் பெற்றவரே சாகாக்கல்வியைப் பெற முடியும். சாகாக்கல்வி கற்று கண்மணியில் தவத்தை தொடர்ந்து செய்து வருபவர் இறைவனோடு ஐக்கியமாவதுடன் தன் உடலையும் பொன்னுடலாக மாற்ற முடியும். தனது ஒளியுடலை இறைவனின் பேரொளியில் கரைத்துவிடவும் முடியும். அத்தகைய ஞானியரின் ஜீவபிரம்ம ஐக்கியத்தின் பின் அவர்களது தூல உடல் எதுவும் மிஞ்சி இருக்காது.

ஞானதானம்.

தவம் கற்றவர்களின் முக்கிய சிறப்பு தானம் செய்வதாகும். எதையும் தானமாக கொடுக்கலாம். அன்னதானம் உயிரைக் காக்கும். ஞானதானம் மனிதர்களை இறைநிலையை அடையத் தூண்டும். பொருள் உள்ளவர்கள் பொருள் உள்ளவரை செய்ய வேண்டியது அன்னதானம். ஞானிகள் உயிர் உள்ளவரை செய்ய வேண்டியது ஞானதானம். “மனிதா! உன் மெய்ப்பொருளை, உண்மைப் பொருளை உணர்வாயாக” என்று எல்லோருக்கும் ஞானத்தை சொல்லிக் கொடுப்பதே, அவர் ஞானம் பெற வழிகாட்டுவதே ஞான தானம். உலக மாந்தர்களுக்கு மனமற்று உயிரை உணர ஞானதானம் செய்வதே சிறந்ததாகும். எல்லோரும் சாகாநிலை பெற உலகருக்கு தேவை ஞானதானம்.

வள்ளலாரின் ஞானதானம்.

விழிகளின் மேலாண்மையை எல்லோருக்கும் உணர்த்தியவர் வள்ளலார். உலக மக்கள் அனைவரும் மரணமில்லா பெரு வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக மிகவும் அரிதான “சாகாக்கல்வி” எனும் பிறப்பறுக்கும் ஞான கல்வியை உலகோருக்கு தெரிவித்தார்., ஞான இரகசியங்களை எல்லோரும் அறிய திருவருட்பாவில் வெளிப்படுத்தி னார். பாமரரும் புரிந்து – தெளிந்து உணரும் படியாக வடலூரில் சத்திய ஞான சபையை கட்டி , உலகில் வேறு எங்கும் இல்லாதபடி , இறைவனை, கருணையே வடிவான பெரும்ஜோதியை எல்லோரும் கண்டு களிக்கும்படி , 7 திரை நீக்கிக் காட்டியருளினார்.

தவமும் தவத்தின் பயனும்.

தவம் என்றால், “நான் யார்” என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே, முயற்சியே. நம் கண்ணில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெர