Thirumandhiram

(1)
முக்தி வேண்டுமா?
முக்தி வேண்டுமானால்
நிறுத்து!
எல்லாவற்றையும் நிறுத்து!
எல்லாவற்றையும் நிறுத்திவிடு!

படிப்பதை நிறுத்து!
படிக்கப் படிக்க
நீ பண்டிதனாக ஆவாயே தவிர
முக்தி அடையமாட்டாய்!

உபதேசம் செய்வதை நிறுத்து!
உபதேசிக்க உபதேசிக்க
நீ போதகனாக ஆவாயே தவிர
முக்தி அடையமாட்டாய்!

பிரார்த்திப்பதை நிறுத்து!
பிரார்த்திக்க பிரார்த்திக்க
நீ யாசித்துக்கொண்டேயிருப்பாயே தவிர
முக்தி அடையமாட்டாய்!

எழுதுவதை நிறுத்து!
எழுத எழுத
நீ எழுத்தாளனாக ஆவாயே தவிர
முக்தி அடையமாட்டாய்!

ஆலயம் செல்வதைத் தவிர்!
ஆலயம் செல்லச் செல்ல
நீ யாத்திரீகனாக ஆவாயே தவிர
முக்தி அடையமாட்டாய்!

மந்திரப் பிதற்றலை நிறுத்து!
மந்திரம் சொல்லச் சொல்ல
நீ மந்திரவாதி ஆவாயே தவிர
முக்தி அடையமாட்டாய்!

எல்லா சடங்குகளையும் நிறுத்து!
சடங்குகளைச் செய்ய செய்ய
நீ சடங்குகளில் மூழ்கிப்போவாயே தவிர
முக்தி அடையமாட்டாய்!

பிரசங்கம் கேட்பதை நிறுத்து!
பிரசங்கம் கேட்க கேட்க
கேள்வி ஞானம் வளருமே தவிர
முக்தி அடையமாட்டாய்!

இறந்த உடலின் அசைவற்ற நிலையில்
உள்ளே ஒளிரும் ஆத்மனைக் கவனி!
அவனுடன் ஒன்றி அமைதியாயிருந்தால்
முக்திக்கான கதவு திறக்கும்.

உடலை மறந்து உலகை மறந்து
உருவக்கடவுள் அனைத்தும் மறந்து
உள்ளே நிலைத்துத் தியானம் செய்தால்
ஏதோ புதிய உணர்வு தோன்றும்.

மேலும் மேலும் தியானம் செய்தால்
உணர்வு நீங்கும் ஒளி அங்கு தோன்றும்.
ஒளியின் உள்ளே செல்ல செல்ல
நீயே ஒளியாய் மாறக் காண்பாய்!

ஒளியில் தியானம் செய்யச் செய்ய
உண்மை தெரியும்; விடுதலை கிடைக்கும்!
மேலும் மேலும் தியானம் தொடர
பெறுவாய் முக்தி அனுபவம் தானே!

(2)
காப்பாற்று!

ஐயா என்னைக் காப்பாற்று!
என்னைக் கை தூக்கி விடு!
நீ என்னைக் காக்காவிடில்
ஆசைத் தீயால்
நான் அழிக்கப்படுவேன்.
கோபக் கனலால்
நான் எரிக்கப்படுவேன்.
பாவச் செயல்களால்
நான் பழிக்கப்படுவேன்.
காமத் தீயால்
நான் தகிக்கப்படுவேன்.
பொறாமைப் பேயால்
நான் பொசுக்கப்படுவேன்.
பழிவாங்கும் எண்ணத்தால்
நான் பாதிக்கப்படுவேன்.
பயமெனும் கொல்லியால்
நான் கொல்லப்படுவேன்.
என் முடிவு இப்படி அமைய வேண்டாம்.
அது உன் திருவடியில்
உன் சங்கமத்தில்
உன்னோடு ஐக்கியமாவதில் அமையட்டும்.
எனவே
ஐயா நீ என்னைக் காப்பாற்று!
————————————————————————-

(3)
இடைவேளை.

குரு சொன்னார்.
கரூர் குரு சொன்னார்.
கரூர் பாலுசாமி குரு அவர்கள் சொன்னார்கள்.
குஹனே எழுதியது போதும்.
குஹனே நீ படித்தது போதும்.
குஹனே நீ பேசியதும் போதும்.
இனி கொஞ்ச காலம்
எழுதுவதை நிறுத்து;
படிப்பதை நிறுத்து;
பேசுவதை நிறுத்து.
எண்ணம், சொல், செயல்
எல்லாவற்றில் இருந்தும் விலகி நில்
நான் உபதேசித்த மந்திரத்திலேயே நிலைத்திரு.
முடிந்தவரை தனித்திரு, கும்பலைத் தவிர்த்திரு.
தொடர்ந்து உன்னுள்ளேயே நிலைத்திரு.
விரைவில் ஆனந்தம் கிட்டும்.
பின் பேரானந்த அனுபவம் கிட்டும்.
குருவின் ஆணைவழி
இன்று முதல் எல்லாம் நின்று விடட்டும்
குருவின் ஆணை பலிதமாகும் வரை.
குருவுக்கு வணக்கம், நன்றி.
————————————————————————
(4)

கருர் சத்குரு சித்தர் பாலுசுவாமிகள் வாழ்த்து.

சத்குரு ஐயா நற்குரு ஐயா.
கரூர் சத்குரு பாலுசுவாமிகள் ஐயா.
நீர் எனை அழைத்தீர் ஆறுதல் தந்தீர்.
தேறுதல் தந்து நிம்மதி தந்தீர்.

அன்பெனும் சொல்லுக்குப் பொருள்நீர் உரைத்தீர்.
அரும்பசி போக்கிட அன்னமு தளித்தீர்.
குளம்பிய மனதுக்குத் தெளிவினைத் தந்தீர்.
என்குற்ற உணர்வுக்கு அழிவினைத் தந்தீர்.

என்காமக் கிளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்தீர்.
கோபத்தை எனைவிட் டோடிடச் செய்தீர்.
குற்றம் காணுமென் குறைதனைக் களைந்தீர்.
கற்றவர் குழுவினில் களித்திட வைத்தீர்.

சூதும், வாதும், கள்ளமும், கபடமும்,
பொல்லாக் கோளும், பொறாமைப் படுதலும்,
பொறுமை இழத்தலும், துன்பம் இழைத்தலும்
எனை விட்டோடிட நீர் அருள் புரிந்தீர்.

குரோதமும், வஞ்சமும், பொய்யும், புரட்டும்,
பிறர்பொருள் கவர்தலும், காட்டிக் கொடுத்தலும்,
பிறர்மனை நோக்கலும், பெண்ணை இழிவாக்கலும்
என்னிடமில்லா இயல்பினைத் தந்தீர்.

நான் எனதென்ற மாயையை அகற்றினீர்.
அனைத்தும் அவனது என்று உணர்த்தினீர்.
மனிதரைத் தெய்வமாய்ப் பார்த்திட வைத்தீர்.
புவியில் எனையும் புனிதன் ஆக்கினீர்.

இறைவன் இருக்கும் இவ்வுடலைக் காத்திட
உலகில் உயர்ந்த அறிவுரை சொன்னீர்.
உயிர்தனை உணர்ந்து உள்ளே உறைந்திட
ஆத்ம தரிசனம் அறிமுகம் செய்தீர்.

அடுத்துக் கெடுத்தலும் அகம்பிடித் தலைதலும்
கெட்ட குணங்கள் எல்லாம் எனைநீங்கிட
புடம் போட்ட தங்கமாய் புதிதாய் எனையே
பூமிக்குத்தந்த சத்குரு பாலுசுவாமிகள் வாழ்க.

பொய்ப் பொருள்களைப் போக விரட்டி
மெய்ப்பொருளுடன் எனை ஒன்றிட வைத்து
புவியில் காணும் அனைத்தும் அழியுமென
புரியவைத்த சத்குரு பாலுசுவாமிகள் வாழ்க.

பொல்லா மனிதர்கள் உறவை அறுத்து
சித்தர் தரிசனம் நித்தமும் தந்து
சிறியோன் எனையும் திரயோதசி நிலையை
அணுகச்செய்த சத்குரு பாலுசுவாமிகள் வாழ்க.

சிவத்தின் நினை வெனை நீங்காதிருக்க
மந்திர தீட்சைத் தந்து
எங்கும் எதிலும் இறைவனைக் காணும்
சூட்சுமம் சொன்ன சத்குரு பாலுசுவாமிகள் வாழ்க.

ஐயா உன்நிழலே என்உலகம் ஆகட்டும்
ஐயா உமதருளே என்பிறவியைப் போக்கட்டும்.
தன் திருவடி தரிசனத்தால் என்னை
சிவனடியாக்கிய சத்குரு பாலுசுவாமிகள் வாழ்க.

மீண்டும் பிறவா நிலைதனை அடைந்து
புறப்பட்ட இடத்தில் புகுந்து ஒடுங்கிட
கரூர் சத்குரு பாலுசுவாமிகள் ஐயா
வாழ்த்தி எனக்கு நீர் வழிகாட்டிடுவீர்.

சத்குரு ஐயா நற்குரு ஐயா
கரூர் சத்குரு பாலுசுவாமிகள் ஐயா
சரணம் சரணம் சரணம் சரணம்.
சரணம் சரணம் சரணம் சரணம்.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

உள்ளே இருந்து உரைத்தவன்: சிவன்.
எழுதியவன்: மு.குஹன்