Teachings

கல்வி – வாழ்க்கைக் கல்வி, வயிற்றுக்கல்வி என இருவகைப்படும். முன்னது உயிர் தொடர்புடையது, பின்னது உடல் தொடர்புடையது. நமது வழிபாட்டுத்தலங்கள் எப்படி ஆன்மாவுக்குத் தேவையான கல்வியை வழங்கி வந்தது அதனால் எப்படி சமூகம் பயன்பெற்றது எனபதற்கு சுவாமிகளின் வாழ்க்கையே எடுத்துக்காட்டு.

வெறும் சடங்கு, சம்பிரதாயங்களில் மட்டும் மூழ்கி விடாமல் இறை, உயிர் உண்மையை வெளிப்படுத்தும் அறநெறிச் சாலைகளாக கோயில்கள் விளங்கவேண்டும்.

‘பசு’ என்றால் உயிர், ‘பதி’ என்றால் தலைவன் என்று பொருள். ஆலயம் – ஆ என்றால் ‘பசு’ அதாவது உயிரானது இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலை, அதாவது லயமாகும் இடமே ஆலயம்.

இந்த வகையில் இந்த கரூரில் சுவாமிகளின் வீட்டிற்கு அருகே அமைந்துள்ள  ஆ நிலையப்பர் (பசுபதீஸ்வரர்) ஆலயம் சுவாமிகளுக்கு இளமையிலேயே ‘இறை, உயிர் உண்மை’யை விளக்கும் பள்ளியாக அமைந்தது இறைவனின் திருவுள்ளம் அன்றி வேறில்லை.

“பக்தி நெறியில் வாழ்க்கைத் தொடங்கி ஞான மார்க்கத்தில் முடிவுற வேண்டும்.” என்பது சுவாமிகளின் அருள்வாக்கு. இவற்றையெல்லாம் பற்றி சுவாமிகள் அருளிய “இறை, உயிர் உண்மை பிறவியின் நோக்கம் பிறவாமை ” என்ற சிறு நூலில் முதல் அத்தியாயத்தில் காணலாம்.

கோவிலுக்கு செல்வது, சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது என்பது ஆரம்பநிலை. கல்லிலும், செம்பிலும் இறைவனைக் கண்டு வழிபடத் தொடங்கி, முடிவில் நம் ஒவ்வொருவர் உள்ளும் மூச்சாக, உயிராக, உணர்வாக உறைபவனே இறைவன் என்று அறிந்து, இறுதியாக உணர்வுபூர்வமாக அனுபவ ஞானமாக இறைவனை அறிவதே ஞானமார்க்கத்தின் இலட்சியம்.

அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை

ஒருவரது அறிவு அவருக்கும், மற்றவர்களுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும். அறிவு என்பது ஒரு எல்லைக்குட்பட்டதல்ல, கல்வி கடல் போன்றது. வெறும் நூல்களைப்படிப்பதால் ஒருவன் கற்றுத் தேர்ந்த பண்டிதனாகலாம், ஆனால் ஞானியாக முடியாது. இயல்பாக இருக்கக் கூடிய உண்மையறிவை ஒருவன் வளர்த்துக் கொள்ள முடியும். ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பது வள்ளுவம். திரு என்பது வெறும் பொருட்செல்வத்தை மட்டும் குறிப்பதாக குறுகிய நோக்கில் கொள்ளக்கூடாது.

அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை, கற்றல், கேட்டல், பெரியாரைத் துணைக்கோடல் என்று பலவகையிலும் ஒருவர் தனது அறிவை பெருக்கிக்கொள்ளும் வழிமுறைகளைக் கூறுகிறார்.

அறிவு என்பதை உலகியல் அறிவு, மெய்யறிவு என இருவகையாகப் பிரிக்கலாம். உலகியல் அறிவு உடலை வளர்ப்பதற்கும் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல்வேறு சூழ்நிலைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் பயன்படும். ஆனால் மெய்யறிவோ உயிரைச் சாந்தது. நமது ஆன்மா, உடல் என்னும் கூட்டை விட்டு நீங்கும்போது உயிருடன் சேர்ந்து வருவது.

‘அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை’
என்பது வள்ளுவம். ‘பொன்றுங்கால் பொன்றாத்துணை’ அதாவது ‘ (உடல்) அழியும்போது, ( உயிருக்கு) அழியாத்துணை’

உடல் அழியும்போது உயிருக்கு அழியாத துணையாக வருவது நாம் செய்யும் வினைகளின் பலன்களே என்பது பொய்யாமொழியாரின் மெய்யுரை.

‘பற்றித்தொடரும் வினைகள்’, ‘இருள் சேர் வினைகள்’ இந்த வினைப்பயன்களின் சேர்க்கையால்தான் ஆன்மா மீண்டும், மீண்டும் பிறவி எடுக்கிறது. பிறவிக் கடலில் சுழலில்சிக்குகிறது, தத்தளிக்கிறது.

இவற்றையெல்லாம் கடப்பதற்கு ஒரே வழி, ஐயாவைப் போன்ற விளம்பரம் இல்லாமல், அண்டை வீட்டுக்குக் கூடத் தெரியாமல் வாழும் /செயலாற்றும் தன்னை உணர்ந்த உண்மை ஞானிகளை அண்டி, யான் எனது என்ற செருக்கற்று பணிவுடன் , “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் நின்று” கற்றுக் கொள்வதேயாகும். இதுவும் அவரவரின் முன்வினைக் காரணமாகவே நிகழும்.

ஐயா அவர்கள் தான் பெற்ற மெய்யறிவின் மூலம் அடுத்தவர்கள் துயரைத் துடைப்பதில் ஒப்பற்றவராகத் திகழ்கிறார்.

அடுத்தவர்களுக்கு வரும் உடல் சம்பந்தப்பட்ட நோய்களையும், வினையின் மூலமாக வரும் உயிர் தொடர்பான நோய்களையும் தான் ஒரு சுமைதாங்கியாக இருந்து ஏற்றுக்கொண்டார். இன்றும் அருவமாக நின்று ஏற்றுக்கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

பணமூட்டைகளை கொண்டுவரச் சொல்லும் போலிச் சாமியார்கள் மத்தியில், மற்றவர்களின் வினைமூட்டைகளையும் பாவமூட்டைகளையும் சுமந்து கொண்டிருப்பவர் ஐயா.

தான்பெற்ற மெய்யுணர்வின் பயனை மக்களுக்கு பகிர்ந்து கொண்டிருக்கும் கரூர் சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் வள்ளுவத்தின் படியே பூதவுடலில் வாழ்ந்து முடித்து புகழுடலில் நின்று அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.

“உங்களுக்கு வந்த சாதாரணமான வலதுகை வலியையே உங்களால் தாங்க முடியவில்லையே ஏறத்தாழ 10000 பேர்களுடைய வினைகளின் வலியையும் உடல் உபாதைககளையும் எந்தவிதமான பாகுபாடுமின்றி ஏற்றுக் கொண்ட சுவாமியின் நிலையை, அவர் பட்டதுன்பத்தை உங்கள் கற்பனையினால் கூட உணரமுடியுமா? ” என்று, என் துணைவியார் மலர்க்கொடி இராஜேந்திரன் கேட்டபொழுது என் மனதில் சுவாமியின் அருளால் தோன்றிய சொற்கள் இவை..