Life

ஐயா என்றும், சுவாமி என்றும் , குரு என்றும் தனது பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பெறும் சுவாமிகள் 14.05.1937 ஆம் ஆண்டு கரூரில் திரு. நடேச முதலியார் மற்றும் திருமதி. கல்யாணி அம்மாவுக்கு மகனாகப் பிறந்தார். சுவாமிக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் உண்டு. ஆனால் இறைவனின் திருவுள்ளப்படி சுவாமிகள் இளம் வயதிலேயே பல துன்பங்களை சந்திக்க வேண்டியிருந்தது.

இரண்டு சகோதரிகளும் நோயின்காரணமாக அடுத்தடுத்து சில மாதங்களிலேயே இறந்துவிட்டனர், சுவாமியின் அன்பே உருவான தாயரும், சுவாமிக்கு 10வயது நிறையும் முன்னரே உலக வாழ்வை நீத்தார்.

ஆனால், இளம் வயதிலேயே சுவாமியை அவரது அம்மா, அருகிலுள்ள பசுபதீஸ்வரர் கோவிலுக்குச் செல்லத் தூண்டுவார். அங்கே தேவராம், திருவாசகப் பாடல்கள் பாடும்போது அதை மனம் ஒன்றிக் கேட்பார். பட்டினத்தார் பாடல்களிலும் சிறுவயதிலேயே அவரது மனம் இயல்பாகவே ஈர்க்கப்பட்டது.

சுவாமியின் வீடு பசுபதிஸ்வரர் கோவில் வடக்கு மடவிளாகத்தெருவில் அமைந்துள்ளது. அடிக்கடி கோவிலுக்கு சென்று அங்கு ஓதுவார் மூர்த்திகளாலும், இசைக் கலைஞர்களாலும் இசைக்கப்பெறும் பாடல்களை ‘செவிநுகர் கனிகளாக’ சுவாமிகள் அனுபவித்ததை அடிக்கடி நினைவு கூர்வதுண்டு.

இரமணரின் வசனாமிருதத்தில் இருந்து சில பகுதிகள். இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் ஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிகளின் மூலம்  அன்பர்கள், அவ்வப்போது ஏதோ ஒரு வடிவில் கேட்டிருக்கின்றனர். ஆனால் கடல் என்பது ஒன்றுதானே. மனிதர்கள் நம் வசதிக்காக வேறு வேறு பெயர்கள் வைத்துள்ளோம். ஆனால் ஆரவாரமில்லாமல் வாழும் ஞானிகள் எல்லோரின் நிலையும் அப்படியே.

1. கேள்வி : சாதகனது முயற்சியைக் காட்டிலும், குருவின் அனுக்ரகமே (குருவருள்) முக்கியமல்லவா?
பதில் : அஞ்ஞானத்தை (அறியாமை) அகற்றுவது குருவின் அனுக்ரகம். அஞ்ஞானம் என்ற மறைப்பு நீங்கியவனுக்கு தானாகவே, உண்மை என்ன என்று விளங்குகிறது.

அவ்வாறில்லாமல் புதியதாக ஏதோ ஒன்றை கொடுத்தலோ அல்லது வருவித்தலோ ஒன்றுமில்லை. குருவருளால் தெளிவடைந்தவன் எந்தவிதமான துன்பமும்; சிறிதுகூட இல்லாத நித்தியானந்த ஸ்வரூபமே ‘தான்’ என்று உணருகின்றான்.

அடக்கமுடியாத மதயானையான அகந்தை, குருவின் அருள்பார்வை பட்டவுடன் இருக்கும் இடம் தெரியாமல் அடங்கிவிடுகிறது. நாம் அடங்கிய இடத்திலேயே நமது பெருமை இருக்கிறது.

அனைத்தையும் இடைவிடாமல் இயக்கிக் கொண்டிருக்கும் ஒரு மகா சக்தியை உணர்ந்து, அதற்கு அடங்கி, அதனையே சரணடையும் போது, அத்தகைய பக்குவ காலத்தில் குருவருள் பக்தனை ஆட்கொண்டு தன்னுடன் அவனை ஐக்கியமாக்கிக் கொள்கிறது.

இடைவிடா முயற்சியாலேயே மனம் வசப்படும், இருந்தாலும் அம்முயற்சியும் திருவருளாலேயே நடக்கிறது, நமது சாமார்த்தியத்தால் இல்லை என்பதை நன்கு உணரவேண்டும். அவ்வாறு உணர்ந்தால், எந்தவிதமான மனக்கவலையும் இல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக உண்மை நிலையில் நிலைபெறுவோம்.

2. கேள்வி : குருவருளின்றி ஏதும் கை கூடாதல்லவா?

பதில் : ஆம் முயற்சியில் சிரத்தை உண்டாதல் குருவருளாலேயே. எல்லா நலனும் அதனாலேயே உண்டாகிறது. உள்ளத்தில் என்றும் ஒளிர்ந்தவாறிருக்கும் சின்மாயானந்த குருவே, புறத்திலும் ஒரு மனிதனாகத் தோன்றி அருள்கிறார். அவரது திருவருளால் அகந்தை ஒழிகிறது. இருப்பது எல்லையில்லா குருஸ்வரூபம் ஒன்றே என்று உணர்கிறோம்.

3. கேள்வி : இறைவழிபாடு, குரு அனுக்ரகம், சித்த ஏகாக்ரதை என்னுமிவற்றில் மிகச் சிறந்தது எது?

பதில் : ஒன்றன் பின் ஒன்றாய் வருபவையே அவை. இறைவன், குரு, ஆத்மா மூன்றும் ஒன்றே. முயற்சியும் அமைவும் ஒன்றே. எந்தவிதமான வேறுபாடும்(தாரதம்யம்) இல்லை.

4. கேள்வி : தியானத்தில் நிலைபெறுதல் எப்படி?

பதில் : தியானமென்பது என்ன? நினைப்பற்று இருத்தலே தியானம்.  யாவும் நினைப்பே; நினைப்பு அற்று இருத்தலே சுகம். அதுவே தியானமும் ஆகும்.

5. கேள்வி : நினைப்பு இல்லாமல் இருத்தல் எப்படி?

பதில் : நினைக்கிறவனைப் பற்றியே நினைப்புகள் எழுகின்றன. நினைப்பவனது மூலத்தை தேடினால், நினைப்புகள் எழாது. நினைப்பு அற்ற நிஜஸ்வரூபம் ஒன்றே ஒளிரும்.

6. கேள்வி : சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, திருவாருரில் பிறந்தால் முக்தி , காசியில் மரத்தால் முக்தி , அருணாச்சலத்தை நினைத்தால் முக்தி என்பதன் உண்மையான பொருள் என்ன?

பதில் :
சிதம்பரம் :தரிசித்தால் முக்தி
சிதம்பரத்தை அதாவது சிதாகாசத்தைத் தரிசித்தல் என்றால் ‘தான்’ ஆக இருக்க கூடிய அதனை உணர்தல்


திருவாருர் :பிறந்தால் முக்தி
கமலாலயம் எனப்படும் திருவாரூர் இதயத்தையே குறிக்கிறது. மெய்யுணர்வு இதயத்தில் பிறத்தல் என்றால் அதனை உணர்தல் என்று பொருள்.

காசி : மரித்தால் முக்தி

காசி என்பது அகண்ட பிரகாசத்தையே குறிக்கும். அந்த அருள் ஒன்றால் அகந்தை முற்றிலும் நசுக்கப்பெறுதலே காசியில் சாதல் எனப்படும்.

அருணாச்சலம்: நினைத்தாலே முக்தி

அருணாச்சலம் என்பது அகண்ட சத்சித் ஆனந்த ஸ்வரூபமே அதனை எப்படியோ மறந்துவிட்டோம். நம்முள் நமதியல்பாகவே என்றுமே நிலைத்திருக்கக்கூடிய அதனை ஸ்மரித்தலே (மீண்டும் நினைவு கூர்தல்) அருணாச்சல ஸ்மரணையாம்.

இவ்வாறாக தரிசனம், பிறத்தல், இறத்தல் நினைவுகூர்தல் என்ற இந்த நான்கும் ஒன்றேயாகும். நான்கும் சிவஸ்வரூபத்தையே குறிக்கிறது.